Sunday, May 27, 2018

அரங்கன் அருளுரை

முருகா என்றால் :
இயற்கையே நம்மை தோற்றுவிப்பதற்க
ும், நம்மை காப்பதற்கும் அழிப்பதற்கும் காரணம் என்று அறிவிப்பான்.
பஞ்சபூதங்களின் தலைவியான இயற்கை அன்னை மாறா இளமையுடன் அதிரூபமாய் வீற்றிருந்து இந்த பிரம்மாண்டமான அண்டகோடி தன்னிலே எல்லா உயிர்களையும் தோற்றி அவற்றினை வளர்த்து அந்த அந்த உயிர்களின் தன்மைக்கேற்ப உடலம் அளித்து அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்ப உடலம்தனை அழித்து மீண்டும் மீண்டும் தோன்ற செய்கின்றாள்.
அந்த இயற்கையே மனிதனாகிய நம்மையும் தோற்றி நமக்கு பசி, காமம் என்ற உணர்வுகளை கொடுத்து பசிக்கு உணவளித்து உடல் வளர்த்து உடல் இன்பம் தந்து நம்மை வளர்த்து காத்து ஒரு கால பரியந்தம் வரை வளர்த்த அவளே சற்றும் கருணையின்றி நம்மை தேயச் செய்து உடல் செயல்களை படிப்படியாக முடக்கி அழித்தே விடுகிறாள். தோற்றியதில் தாயாய் இருந்த அவளே காளியாய் மாறி அழிக்கின்றாள் என்ற பரிணாமத்தின் சுழற்சிதனை முருகனை முருகா! முருகா!! முருகா!!! என்றே பூசித்து பூசித்து அவன் அருள் பெற்று உணரப்பெறலாம்.
முருகன் திருவடியைப் பற்றி மனம் உருகி முருகப்பெருமானார் தம் நெஞ்சம்தனை தொடுமளவிற்கு பூசைகளை செய்திட செய்திட அவனும் மனமிரங்கி எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையே நமது அழிவிற்கு காரணமானதையும் எந்த இயற்கை நமது அழிவிற்கு காரணமாய் இருந்ததோ அந்த இயற்கையின் துணைகொண்டு அவளை மயங்கச் செய்து அவளது ஆசியினால் அவளை நம்முள் சார்ந்திடச் செய்து அவளது மீளமுடியாத பரிணாமத்தின் சுழற்சிக்கு அகப்படாமல் வெளியேறி விடலாம் அதன்பின் இயற்கைக்கு அடிமையாகிய நாம் அவளை அவளது துணையாலேயே அடிமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் உணர்த்துவான்.
முருகப்பெருமானார் தமை இடைவிடாது எந்நேரமும் நிற்கும்போதும் நடக்கும்போதும் ஓடும்போதும் உண்ணும்போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்ப
ோதும் என்றே சகல காலத்தும் மனிதினுள் முருகனை சிந்தித்தும், நாமம்தனை சொல்லியும் வரவர முருகனின் நாமத்தின் வல்லமைகள் கூடி அந்த முருகனே உமது அறிவினைச் சார்ந்துமே இயற்கை அன்னையின் ஆசியை பெறுவது எப்படி என்றே உணர்த்திட முற்படுவான்.
எதற்கும் மயங்காத இயற்கையையும் மயக்கி தன்வயப் படுத்திடலாம் என்றே உணர்த்துவான் ஞானத்தலைவன். எந்த இயற்கை உலகினுள் உயிர்களை தோற்றுவித்ததோ அந்த இயற்கை தோற்றிய எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த செலுத்த அந்த உயிர்களை மகிழச் செய்ய செய்ய அந்த உயிர்களிடத்து வெளிப்படும் இயற்கை உமது உள்ளத்து வெளிப்படும் தயவினால் ஈர்க்கப்பட்டு உமது தயவின் ஒளி பெருக பெருக அந்த உயிர்கள்பால் உள்ள இயற்கை அன்னை உமது தயவினை கண்டு மகிழ்ந்து உமது தயவின் செயல் கண்டு மகிழ்ந்து மகிழ்ந்து உன்னிடம் மயங்க ஆரம்பிப்பாள்.
மயங்க ஆரம்பிக்கும் இயற்கை அன்னை உம்மை அவ்வளவு எளிதில் சார்ந்திட மாட்டாள். உமக்கு எளிதில் ஆசியையும் வழங்க மாட்டாள்.
எவர் ஒருவர் இயற்கையை முதலில் வென்றாரோ அவரே அதன் சூட்சுமம் அறிந்தவன். அவனே ஞானத்தலைவனாகிய முருகப்பெருமான் என்றே உணர்வினுள் ஆழப்பதிந்து மேன்மேலும் முருகா! முருகா!! என உளமார உருகி உருகி தியானிக்க முருகன் தனக்கு அவர்தம் திருவடிக்கு உள்ளம் உடல், பொருள், ஆவி அனைத்தும் ஈந்து அர்ப்பணம் செய்து முருகனைத்தவிர வேறொன்றும் நாடாத நிலைதனிலே வருகையுற்று அயராது நாத்தழும்பேற முருகனை செபித்து செபித்து செபித்து உருகி உருகி உருகி உள்ளம் உருக ஊன் உருக நம் பாவமெல்லாம் பொடிபட்டு கரைந்திட கல்லும் கரையும்படியான உருக்கத்துடன் உருகி தியானித்திட மனமிரங்கும் முருகப்பெருமான் உம்முள்ளே தயவு ஒளி கூட்டி தாமே உம்மை சார்ந்து உமது உயிர்சார்ந்து உடல் சார்ந்து இயற்கை அன்னையை உம்முள் வந்திடச் செய்யும் உபாயம் உரைப்பான்.
உலக உயிர்கள்பால் அன்பு செலுத்த செலுத்த உயிர்கள் மகிழ மகிழ அவையனைத்தும் ஆசிகளாய் மாறி அந்த ஆசிகளெல்லாம் அளவு கடந்து செல்ல செல்ல இயற்கை அன்னையும் மீள முடியாமல் உம்முள் வசமாவாள்.
எல்லா உயிர்களையும் தோற்றி காத்து இரட்சித்து அந்த உயிரிடத்து சார்ந்து இளமை அளித்து தாமே அவ்வுயிர்களிடத்து தேய்ந்து முதுமையாகி பின் அவ்வுயிர்களை விட்டு நீங்கி உடல் அழித்து மீண்டும் பிறிதொரு உடல் தந்து பிறவி தந்து காத்து அழிக்கின்ற அந்த இயற்கை அவ்வுயிரிடத்து வெளிப்பட்டு தான் மட்டும், என்றும் மாறா இளமையுடன் இருக்கின்றாள். அவளை தயவினால் தான் மயக்க முடியும். தயவின் ஆற்றல் பெருக பெருக ஒரு தக்க சமயம் தயவின் அருள் கூடிட விலகும் இயற்கை விலகாது சிறுகசிறுக நம்மிடம் மயங்கி மயங்கி நம்மை சார்ந்திடுவாள். முருகன் நம்முள் இருந்து நம்மை நமது அறிவை நமது உடலை, நமது ஆன்மாவை இயக்கி அவள்தனை நம்முள்ளே ஐக்கியமாக்கிட செய்திட ஐக்கியமான இயற்கை அன்னை அவளது பரிணாமப் பிடியினின்று நம்மை விடுவிக்கும் சாவியினை நமக்கு அருளி நம்மைவிட்டு வெளியே செல்லாமல் நம்முடனே தங்கிடுவாள்.

No comments: