Saturday, May 19, 2018

போகரின் அற்புதம் பாகம் 2

"இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.
மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,
"வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான். உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார். இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்" என்றேன்.
அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;
"உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.
இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர். கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது. அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள். அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார்
போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம். தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது. குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது. மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம். என்ன நடந்தது என்று புரியவில்லை. பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும். ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது. அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.
குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார். குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம். ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை. குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர். எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர். வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை. எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும் நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார்
"இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது. சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை? சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது. அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை. சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது. புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.
சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

No comments: