Thursday, June 21, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 8

"ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால், வேலை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இல்லையா. அது போல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு சூக்ஷ்ம உடல்களை அவனிடமே, தாரை வார்த்துக் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்கிற தீர்மானத்தை இறைவன்தான் எடுப்பார். எப்படி அந்தந்த கர்மாவை மன்னித்து கரைக்க வேண்டும், அல்லது எத்தனை ஜென்மத்தை குறைத்துக் கொடுக்கலாம், எந்தெந்த ஜென்மத்தில் எந்தெந்த கழிக்காத கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பல நிலைகள் உண்டு. அத்தனை சூக்ஷ்ம உடல்களையும் ஏற்றுக்கொண்டுவிட்டாலும், இந்த ஜென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாவை அனுபவிக்க வைத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத கெட்ட கர்மாவை, இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று சேர்த்துவிட தீர்மானித்தால், மிகப் பெரிய நோய்களும், பிரச்சினைகளும் வரலாம். ஆகவே, சூக்ஷ்ம உடல்களை ஒப்படைப்பவர், என்ன வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சூக்ஷ்ம உடல்களை ஒப்படைத்துவிட்டு, சறுக்கு மரத்தில் வழுகிச் செல்வது போல் இந்த ஜென்மாவை கடந்து போய்விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு சிறு துளி "கடன்" போலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், மோக்ஷத்திற்கு வாய்ப்பே. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர் யார் என்று நீ தேடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார். புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்கே எட்டாத கடன் என இன்னொன்றும் உண்டு. சுருக்கமாக சொன்னால், ஒரு தூசு அளவுக்கு கூட கர்மா ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனத்தான், மனிதர்கள் விரும்ப வேண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.

ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டும். அதுதான் அவன் விதி. இந்த கொடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு சேர்கிற கர்மாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போக, அவன் எண்ணம். ஆசை. அவன் பார்வை போன்றவை, பலவித கர்மாக்களை ஒன்று சேர வைக்கிறது. அதையும் மீறி ஒருவன், நான் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்று தீர்மானித்து, நடந்து சென்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தலை மீது அத்தனை குப்பை கர்மாவையும் கொண்டு கொட்டுவார்கள். கொட்டிவிட்டு போகட்டும், கொட்டப்படுவது, என்னுள் உறையும் இறை மீது என்று நடந்து சென்றால், கொட்டியவர்களே, திட்டி தீர்த்து, அவன் கெட்ட கர்மாவை வாங்கிக் கொள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால்  வெகு எளிதில் சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்பை கொட்டியவர்களாலேயே! என்ன விசித்திரமான தண்டனை என்று பார், என்று நிறுத்தினார்.

"எதையும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், எதையும் வாங்கும்போது "நாராயணார்ப்பணம்" என்று மனதுள் நினைத்துக்கொள்! எதையும் கொடுக்கும் பொழுது "சிவார்ப்பணம்" என்று கொடுத்துவிடு. எதுவும் உன்னை பற்றாது" என்றார்.

சட்டென்று "அட! மிக எளிதாக இருக்கிறதே, நல்ல வழிதான்!" என்று மனதுள் நினைத்தேன்.

இருப்பினும், "இதன் தாத்பர்யம் என்னவோ?" என்றேன்.

"வாழ்ந்து முடிக்கும் வரை அனைத்தும் நாராயணனுக்கு சொந்தம், அதனால், பெற்றுக்கொள்கிற பொழுது நாராயணார்ப்பணம்! கொடுக்கும் பொழுது பிறர் நன்றாய் வாழ அவர் வாழ்க்கைக்கு கொடுப்பதால், இருக்கும் வரை நல்ல படியாக வாழ்ந்துவிட்டு போகட்டும், பின்னர் சிவனிடம் தானே சென்று சேரப்போகிறது என்று உணர்த்தவே, கொடுக்கும்பொழுது "சிவார்ப்பணம்" என்று கூறி நிறுத்தினார்.

சற்று நேரம் எங்கும் அமைதி. எங்கும் பரவி நின்ற அமைதியை சற்று மென்மையாக கலைத்தபடி, தூரத்திலிருக்கும் கோவிலின் மணியோசை சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் கையால் உயர்த்தி காட்டவே, அடியேனும் எழுந்து நின்றேன்.

ஒரு நொடியில், பக்கத்திலிருந்த புதரிலிருந்து, ஒரு மிகப் பெரிய அரவம் வேகமாக மணியோசை வந்த திசை நோக்கி சென்றது. அதை கண்டு ஒரு நிமிடம். உறைந்து போனேன். முதுகில் ஏதோ தடவியது போல் உணர்வு வர, திரும்பி பார்த்தால், நால்வரில் ஒருவர், அடியேன் தோள்மீது, கைபதித்து மெதுவாக, "அமைதி" என்றார்.

அனைத்தும் ஒடுங்கிப்போய், சிலையாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மௌனத்தை கலைக்கும் விதமாக, "இறைவனின் பூசையை பார்க்க, அம்மா கிளம்பிட்டா. இனி நாம் நம் கலந்துரையாடலை தொடருவோம்" என அந்த பெரியவர் கூறினார்.

ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு, "நாம் எல்லோருமே, அந்த கோவிலுக்கு சென்று பூசையை கண்டு வரலாமே" என்று கூறினேன்.

"இது இருக்கும் இடத்திலேயே இருந்து உணரவேண்டிய நிமித்தம் . துரத்தி சென்று வேடிக்கை பார்க்க வேண்டிய நேரம் அல்ல. இங்கிருந்தே கண் மூடி தியானித்தால், அந்த பூசையை உள்ளே காணலாம். துரத்தி சென்று பார்க்க முயற்சித்தால், திரும்பி எழுந்து நின்று தடை விதிக்கும் நேரமாக மாறிவிடும். 

No comments: