Thursday, June 21, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 12

"இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே" என்றேன்.

 "இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா? முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம். சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?" என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று "தலை கீழ் லிங்கம்". இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார். [அந்த சித்தர் கோவிலை பற்றி இன்னொரு நேரத்தில் தனி தொகுப்பாக, விளக்குகிறேன்!].

"என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ தொடரும்!

No comments: