Friday, July 20, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 17

அமைதியாக இருந்த சூழ்நிலையை மனம் உற்று நோக்கத் தொடங்கியது! நகரத்தின் இரைச்சலான சப்தத்தில் வாழ்ந்துவரும் எனக்கு, அந்த இடத்தின் சூழ்நிலை, சன்னமான குளிர்ந்த காற்று, சுற்றிலும் இருக்கும் காடு போன்ற அமைப்பு, பறவைகளின் சப்தம்,  தூரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் மாட்டு மந்தைகள், நேர் எதிரே உயர்ந்து வளர்ந்திருந்த மலை, இவை அனைத்தும் ஓர் அமைதியை உள்ளே நுழைத்தது. எதுவும் யோசிக்கவோ, பேசவோ தோன்றவில்லை. இயற்கையின் இயல்பே இதுதான் என்றால், மலையை தவிர மற்ற அனைத்தும் நான் வசிக்கும் இடத்தருகில் இருந்தும், ஏன் இந்த அமைதி வருவதில்லை? இரைச்சலான சூழ்நிலைதான் காரணமா?" என்று யோசித்தபின், சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். எங்கோ இழுத்துச் சென்றது. நினைவு மழுங்கிப்போனது.

யாரோ தூரத்திலிருந்து "நமச்சிவாய" என்று கூப்பிடுவதை கேட்டு உணர்வு வந்து விழித்தெழ, நான்கு பேரும், என் முன்னே அமர்ந்திருந்தனர்.

"என்ன! த்யானத்துல ரொம்ப தூரம் போயிட்டேங்க போல? ஒரு நாழிகை என்றுவிட்டு, 45 நிமிடமாயிற்று நாங்கள் வர. மேலும் 15 நிமிடங்கள் பொறுத்து பார்த்துவிட்டுத்தான், உன்னை கலைத்தோம்!" என்றார்.

"எப்படி இருந்தது, த்யான சூழ்நிலை?" என்றார்.

"மிக அமைதியாக இருந்தது" என்றேன்.

"ஏன் நகரத்தில் இது அமைவதில்லை என்று தோன்றியிருக்குமே!" என்று அவரே கொக்கி போட்டார்.

"ஆமாம்!"

"மனித உடலில் இருக்கும் ஒரு ஆத்மா உணர்ந்தால்தான் உண்மை புரியும். இயற்கை என்று ஒன்று இருப்பினும், அதை இறைவனாகவே பாவித்து, தினமும் சில நேரம் த்யானத்தில், நல்ல எண்ணங்களை கதிர்வீச்சாக மனிதன் கொடுத்தால் தான், அதை வாங்கி பன் மடங்காக்கி, கேட்பவருக்கெல்லாம் அது கொடுக்கும். அதை உணர்ந்து வாங்கிக்கொள்கிறவன், தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும், தன் அருகே இருக்கும் அனைத்து ஆத்மாக்களையும் சுத்தம் செய்கிறான். இறைவனை அடைய நாங்கள் செய்கிற பயிற்சியாகட்டும், த்யானமாகட்டும், அனைத்தையும் இயற்கைக்கே தானம் செய்துவிடுகிறோம். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அனைவருக்கும் போய் சேரவேண்டும் என பிரார்தித்துக் கொள்வோம். நகரத்தில் வாழும் மனிதருக்கு, வாழ்க்கையின் இரைச்சல் நிறைந்த அவசரத்துக்கு, இந்த உண்மையெல்லாம் உணர்வதே கடினம். பின்னர் எப்படி தானம் செய்ய மனம் வரும். இந்த சூழ்நிலையை வித்யாசமாக, மனதுக்கு இதமாக நீ உணரக்காரணமே, இயற்கை தான். ஒவ்வொரு ஆத்மாவும், தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், தன் அமைதியை, எங்கிருந்து எடுத்துக் கொள்வது, என்று தீர்மானிப்பதில்தான், மிகப் பெரிய தவறு நடக்கிறது. அதில் மாட்டிக்கொள்வது, பிற ஆத்மாக்களும், பஞ்ச பூதங்களும். இவைகளை தோண்டித் துருவுவதை விட்டு, அவன் உள்ளே சென்று தோண்டித்துருவினால், உள்வெளிச்சம் கிடைக்குமே. நிறைய உண்மைகளை புரிந்து கொள்ளலாமே!" என்றார்.

"உண்மைதான்! ஆனால், மனிதன் வாழவேண்டிய வாழ்க்கைக்கான, தேடலில், இதை மறந்து விடுகிறான் போலும், எனக் கொள்ளலாமே" என்று கூறவும்,

"தேடுகிற பொருள் என்ன என்பதை அவன் தானே தேர்ந்தெடுக்கிறான். தேடுவது அனைத்தும், பௌதீக பொருளாக இருப்பதால், அவன் இந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொள்ள வைக்கிறது.  பசிக்கு இட்லி  சாப்பிட்டு பசியடக்குபவனும் இங்குதான் இருக்கிறான். காற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்கிற தவசியும் இந்த பூமியில் இருக்கிறான். இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்யாசம் என்னவென்றால், உணவு உண்டு வாழ்பவன், நிறைய பாப கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறான். தவசி, காற்றை உண்டு, வெறும் நீரை குடித்து இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையை சுத்தம் செய்கிறான்" என்றார்.

"இது என்ன! புது தகவலாக இருக்கிறதே! உயிர் வாழ இயற்கை கொடுக்கிற உணவை உண்கிறவன் பாபகர்மாவை சேர்த்துக் கொள்கிறானா? ஆச்சரியமாக இருக்கிறதே! சற்று விளக்குங்களேன்" என்றேன்.

"சொல்கிறேன்! நிதானமாக கேட்டு புரிந்து கொள்!" என்றார்.

சித்தன் அருள்............. தொடரும்!

No comments: