Saturday, December 28, 2024

பார்வை குறைபாடு நீங்க

சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7 . கண் பார்வை பாதிப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அப்பனே, இதை பற்றி பல சித்தர்களும் எடுத்துரைத்து விட்டார்கள். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை எடுத்துக் கொண்டு, அவை மட்டுமல்லாமல், வாரத்துக்கு இருமுறை முருங்கை சாற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், சிரசாசனம் தினமும் செய்ய வேண்டும். (2) சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! அப்பனே கண்களில் கூட அதாவது சிறிது சிறிதாக நுண்ணுயிர்கள் பின் அழிகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் கண்ணும் அதாவது பார்வை குறைபாடும் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே இவ்வாறு புண்ணிய நதிகளில் நிச்சயம் அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் அழிந்து கொண்டே போகின்றது இதனால் தான் அப்பனே பார்வை குறைபாடு இதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட நீராட அவ் கண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுடன் நதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே ஒன்றாக இணையும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே பார்வை அதிகரிக்குமப்பா!! அப்பனே இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!

Wednesday, December 25, 2024

அகத்தியர் உத்தரவு❤️

சித்தன் அருள் - 1754 - அகத்தியப் பெருமானின் உத்தரவு! வணக்கம் அகத்தியர் அடியவர்களே! அகத்தியப் பெருமானின் ஜீவநாடியில் ஒரு தனிப்பட்ட விஷகயத்துக்காக உத்தரவு கேட்ட பொழுது பொதுவாக எல்லோரும் கடைபிடிக்க ஒரு உத்தரவை இட்டுள்ளார். அந்த உத்தரவை எளிதாக கீழே விளக்குகிறேன். 1 இந்த மார்கழி மாதத்தில் அனைவரும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒருமுறையாவது வீட்டில் கூற வேண்டும்! கூற முடியாதவர்கள், 2. ஒலியாக ஒலிக்கவிட்டு கேட்க வேண்டும். அதுவும் முடியாதவர்கள் 3. ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலுக்கு தினமும் சென்று முப்பது நிமிடங்கள் த்யானத்தில் அமர வேண்ண்டும். மேலும் தை பிறந்த பின், ஒருநாள் ஆணும், பெண்ணும் உடுத்த உடைகளையும், உணவையும் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்திட வேண்டும்! இவ்வாறு செய்திட, பெருமாள் மனம் மகிழ்ந்து, ஒவ்வொருவரின் கரை ஏறாத பித்ரு ஆத்மாக்களுக்கு மோக்ஷத்திற்கான வழியை கொடுப்பார். ஒவ்வொருவரின் கர்மாவிலும் சேர்ந்திருக்கும் பித்ரு சாப/தோஷங்களை இச்செயல் கரைக்கும். வாழ்வு வளமாகும். ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Thursday, December 19, 2024

அடியேன் வேண்டுகோள் 🙏

வெளிநாட்டில் உள்ள அன்பர்கள் இந்த நவ தீப வழிபாட்டை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை அனைவரையும் இதை கடைபிடிக்குமாறு செய்ய வேண்டும் இதன் மூலம் உங்களுக்கும் பல நன்மைகள் நடைபெறும் ஒரு 108 பேருக்கு இந்த வழிபாட்டை செய்யச் சொல்ல வேண்டும் இதன் மூலம் இதன் மூலம் உலகத்தில் பேரழிவுகள் நடைபெறுவது தடுக்கப்படும் உன் அகத்தீசாய நம ❤️❤️❤️ குருவே திருவடி சரணம் திருவடி சரணம்🙏🙏🙏

நவ தீப வழிபாடு ❤️❤️❤️

12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு!!! பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்று உத்தரவு தந்துள்ளார் குருநாதர் அகத்தியர் பெருமான். அப்பனே நன்றாகவே பின் அதாவது சரியாகவே அப்பனே ஒரு பட்டு துணியை அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது தூய மஞ்சளில் இட்டு பின் நனையுங்கள் நீரினாலே!!! அறிந்தும் கூட அதை கீழே வையுங்கள்!!!! அப்பனே/ அம்மையே!!! இவை அறிந்தும் கூட நிச்சயம் அதன் மேலே வெற்றிலை பாக்கும் கூட!!!! அறிந்தும் கூட நிச்சயம் பின் உதாரணத்திற்கு பின் சூரியனுக்கான பின் எவை என்று அறிய அறிய தானியம் (கோதுமை) அறிந்தும் கூட அதை பரப்புங்கள்!!! அறிந்தும் இதையென்று புரிய நிச்சயம் பின் இதன் மேலே பின் தீபம் வையுங்கள்!!! அறிந்தும் இதை தன் சூரியனாக (தீபத்தை) நினைத்துக் கொள்ள வேண்டும்!!! அறிந்தும் இதை என்று பயன்படுத்த நிச்சயம் பின் அறிந்தும் கூட ஜோதியை ஏற்றுங்கள். அப்பனே நன்றாகவே இவை என்று அறிந்தும் இதை தன் பின் உண்மையென புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் கிராம்பையும் கூட நல்விதமாகவே அறிந்தும் கூட பச்சை கற்பூரத்தையும் கூட ஏலக்காயையும் கூட நிச்சயம் பின் மாவாக்கி...(இவை மூன்றையும் பொடித்து) பின் அத் தீபத்தில் உள்ளே இட்டு பின் சூரியனுக்காக அதாவது காயத்ரி மந்திரத்தையும் கூட 108 முறை செப்புங்கள்!!! இதே போல் பின் சந்திரனுக்கும் குருவானவனுக்கும் ராகுவானவனுக்கும் கேதுவானவனுக்கும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தீபமாக நவ தீபங்கள். ஏற்ற வேண்டும்!. இப்படி ஒவ்வொரு நவகிரகத்திற்கும் பட்டு துணி தீபம் வெற்றிலை பாக்கு அந்தந்த கிரகத்திற்குரிய தானியங்களை வைத்து ஏற்றி அந்தந்த கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை செப்புதல் வேண்டும் இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும். இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!! அதனால்தான் முதலிலேயே சொன்னேன். இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள்... தை! மாசி! மாதங்கள் வரை!

Monday, December 16, 2024

அகத்தியர் உத்தரவு

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! சமீபத்தில், இனி வரப்போகும் காலத்தை பற்றி குருவிடம் கேட்ட பொழுது, இவ்வாறு கூறினார். "ஆண், பெண், குழந்தைகள், வித்தியாசமின்றி அனைவரும் ஒரு சிறு ருத்திராக்ஷத்தை கழுத்தில் அணிவது, வரப்போகும் காலத்தின் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த கவசமாக மாறும்" என்றார். குறிப்பிட்ட நட்பு வட்டத்துக்கு மட்டும் தெரிவித்து முடித்தபின், அனைவருக்கும் தெரிவித்து விடலாம் என்ற எண்ணம் உதிக்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் அகத்தியர் அருள் காக்கட்டும்!

Wednesday, December 4, 2024

அவதூதர்கள் பகுதி மூன்று

எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் தயாராக இருந்தது. "இல்லை இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நண்பரால் கூற முடியவில்லை. முன் பின் தெரியாத ஒருவர் தன்னை பற்றி, தான் பயிற்றுவிக்கும் யோகாவை பற்றி, நடக்கிற விஷயங்கள் அனைத்தும் தன் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராக நடக்கும் போது மேலும் கேள்வி கேட்டு, சோதித்து, அதையும் கண்ணால் பார்த்து பின் இயல்பாவோம் என்ற தீர்மானத்துக்கு வந்தார். "இதுவரை நீங்கள் சொன்னது/செய்தது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. உங்கள் குரு எங்கிருக்கிறார்?" என்றார், நண்பர். "என் குருவானவர் ஹிமாலயத்தில் இருக்கிறார். என்னைப்போல் பலரும் "நாகா"குழுவை சேர்ந்தவர்கள். குருவின் உத்தரவை நிறைவேற்ற பல இடங்களுக்கும் போய் அவர் கூறிய வேலையை செய்து விட்டு போவோம்" என்றார் சிரித்தபடியே! "ஹிமாலய நாகா குழுவை சேர்ந்தவர் என்கிறீர்களே! அப்படியாயின் ஒரு நிகழ்ச்சியை நடத்தி காட்டுங்கள், தெளிவியுங்கள்!" என்றார் நண்பர். "சரி! நீங்களே சொல்லுங்கள்!" என்றார் புன்னகைத்தபடி. நண்பர் தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்படியே திரும்பி பார்த்தார்! ஒரு இளைஞ்சன் வீட்டுக்கான சாமான் வாங்கிக் கொண்டு இவர்களை கடந்து, அந்த பெண்மணியையும், நண்பரையும் அதிசயமாக பார்த்தபடி சென்றான். அவன் நடந்து சென்று ஒரு நிமிடம் ஆனவுடன், நண்பர் பேசினார். "நம்மை கடந்து அந்த இளைஞ்சன் சென்று ஒரு நிமிடம் ஆகிறது. இன்னும் ஒரு நிமிடத்தில், பக்கத்தில் இருக்கும் கோட்டை வாசல் வழியே வெளியே சென்று விடுவான். அவன் இந்த கடைக்கு திரும்பி வந்து ஆங்கிலத்தில் "A Coffee without Sugar" என்று கூறி கடைக்காரரிடம் காப்பியை பெற்று, குடித்துவிட்டு திரும்பி அவன் வந்த வழியில் சென்று விட வேண்டும்! இதை செய்ய முடியுமா? " நின்ற இடத்திலிருந்து அவர் திரும்பி பார்க்க, அந்த இளைஞ்சன் கோட்டையின் வாசலை தொட்டுவிட்டான், வலது பக்கம் திரும்பி வெளியே சென்றான். அந்த பெண்மணி ஒரு நொடி கண்ணை மூடி திறந்தார். பின் நண்பரை பார்த்து "Done!" என்று கூறி, நண்பரை பார்த்து சிரித்தபடி, நீங்கள் கேட்டது உங்கள் கண் முன் உடனே நடக்கும்! பொறுத்திருங்கள்!" என்றார். "அந்த இளைஞ்சன் கோட்டையை கடந்து, வலது பக்கம் திரும்பி போய்விட்டான்! இனிமேலா திரும்பி வருவான்? அதுவும் நான் கூறியதுபோல் ஆங்கிலத்தில் கேட்ப்பான் என்கிறீர்களா? சரி பார்ப்போம் என்றார்" நண்பர் சிரித்தபடியே. "கேட்டுக் கொண்டபடி நடக்கும்! சற்று பொறுங்கள்! அமைதியாக கவனியுங்கள்!" என்றார் அந்த பெண்மணி. சிரித்துக் கொண்டே நின்ற நண்பரிடம், கடைக்காரர், "என்ன அய்யா! எப்போதும் போல ஸ்டராங் காப்பி உங்களுக்கு போடவா?" என்றார்! "சற்று பொறுங்கள்! பேசி முடித்து பின் கூறுகிறேன்!" என்றார் நண்பர். சற்று இயல்பாக பேசும் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்ட நண்பர், "அதெப்படி! உங்களால் மலையாள மொழியில் பேச முடிகிறது? நீங்களோ ஹிமாலயத்திலிருந்து வருகிறீர்கள் என்கிறீர். இதற்கு முன் இங்கு கேரள நாட்டில் இருந்திருக்கிறீர்களா?" என்றார். "இந்த நாட்டிற்கு இதுதான் முதன் முறையாக வருகிறேன்" என்றார். "அப்போ! எப்படி சரளமாக மலையாள மொழி பேசுகிறீர்கள்?" "இங்கு காற்றில், ஆகாசத்தில் அனைத்து மொழிகளும் உள்ளது. ஆகவே அதை எடுத்து உபயோகிப்பது எங்களுக்கு மிக எளிது!" என்றார். ஏதோ கேட்க எத்தனித்தவரை, கண்களால் சமிக்ஞ்சை காட்டினார் அந்த பெண்மணி. யாருக்கோ வழிவிட சொல்கிறார் போல என்று நினைத்து திரும்பி பார்த்த நண்பர், அதே இளைஞ்சன் அத்தனை சாமான்களையும் கையில் சுமந்தபடி, கடையை நெருங்கியதை கண்டார். கையில் இருந்த அத்தனை சாமான்களையும் கீழே வைத்துவிட்டு, கடைக்காரரிடம், ஆங்கிலத்தில் "A Coffee without Sugar" என்றார். பின் திரும்பி இவர்கள் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தார். நண்பர் பெண்மணியை பார்த்து, ஒத்துக் கொள்ளும் பாவனையில் தலையாட்டினார். "உங்கள் கேள்வியின் முதல் பாகம் நடந்துவிட்டது. இரண்டாவது பாகம் இருக்கிறது. அதுவும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் அந்த பெண்மணி. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

அவதூதர்கள் பகுதி ரெண்டு

ஒரு மணி நேரத்துக்குப்பின் காப்பி கடையின் இடத்தை அடைந்த நண்பர், கடைக்கு எதிரே ரோட்டில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, இதெல்லாம் தேவையா, எதற்காக அவசரப்பட்டு வந்தோம் என்று யோசித்தபடியே, தன்னை அழைத்த பெண் அங்கே நிற்கிறாரா என்று பார்க்க, சற்றே அதிர்ந்து போனார். ஒரு ஐந்தடி உயரம், மிக இளமையான தோற்றம், நெற்றியில் மிகப்பெரிய குங்குமப்பொட்டு, கை நிறைய வளையல்கள், விரல்களில் பலவித கற்கள் பதித்த மோதிரங்கள், மூக்கில் ஒரு தங்க வளையம், பெண்கள் அணியும் "குர்தி" என்கிற உடையில், இத்தனைக்கும் சேரா விதத்தில், மிக நீளமான தலை முடியை சித்தர்கள் போல் தலை மேல் லிங்க ரூபத்தில் கட்டி இருந்தார். கடைகாரரிடம் வணக்கம் சொல்லிவிட்டு, அவரை நெருங்கும் போதே மிக கெட்டியான பன்னீர், ரோஜா வாசனை இவரை தாக்கியது. இதை உணர்ந்தவர், தான் சந்திக்க போகிற பெண் சாதாரண பெண் அல்ல என்பதை உணர்ந்தார். அருகில் சென்று "நீங்கள் தானே ஒரு மணிநேரம் முன் என்னை தொடர்பு கொண்டது?" என்று வினவினார் என் நண்பர்! "ஆம்! நான் தான்!" என்றவர் "பரவாயில்லை! சக்கர வளயத்தை நன்றாக போட்டுள்ளீர்கள். தலையில் முடிக்குள் வைத்துள்ளது பைரவர் பிரசாதமோ? நல்லது!" என்றார். நீ என்ன செய்தாலும் எனக்கு தெரியும் என்கிற தோரணை அதில் இருந்தது! பேச்சை வழி மாற்றும் விதமாக "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றார் நண்பர்! "ஹிமாலயத்திலிருந்து வருகிறேன்! உத்தர பிரதேசத்திலுள்ள யோகி என் நண்பர்!" என்றார்! "ஒ! அப்படியா!" என்றவரிடம் நெருங்கி "நான் சொன்ன யோகி முதலமைச்சர்" என்றார்! இவர் மிக உயர்ந்த இடத்திலிருந்து வந்தவர் மட்டும் அல்ல, உயர்வான தொடர்பும் உடையவர் என்று உணர்ந்து, பேச்சை மாற்றும் விதமாக "பத்மநாப ஸ்வாமியை போய் பார்த்தீர்களா?" என்றார், நண்பர். "ஆஹ்! உள்ளே போய் பார்த்தேன்!" என்றார்! "இதே உடையில் உள்ளே போனீர்களா? உங்களை நிச்சயமாக உள்ளே கடத்தி விட்டிருக்க மாட்டார்களே. புடவை அல்லது ஒரு வேஷ்டி உடுத்தியிருக்க வேண்டுமே!" என்றார் நண்பர். பதிலுக்கு அவர் சொன்னது, இவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. "இதே உடையில் தான் உள்ளே சென்றேன். யாரும் என்னை பார்க்கவில்லை/கவனிக்கவில்லை! பார்க்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டுதான் சென்றேன். அதன்படியே நடந்தது. பத்மநாப ஸ்வாமியை தரிசனம் செய்தேன். அகத்தியர் அங்கில்லை. எங்கோ சென்றிருக்கிறார்! அவரை கைலாசத்துக்கு போகும் போது பார்த்துக் கொள்கிறேன்!" என்றாரே பார்க்கலாம். "அதெப்படி, கோவிலுக்குள் எங்கும் சிசி டிவி கேமரா உள்ளது. 24 மணிநேரமும் எட்டு பக்கத்திலும் நடப்பவற்றை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கும். அதில் உங்கள் உருவம் நிச்சயமாக பதிந்திருக்கும்!" என்றார், என் நண்பர்! இவர் தனக்கு ஏதேனும் பிரச்சினையாகிவிடும் என்று நினைத்து இந்த கேள்வியை கேட்கிறார் என்று உணர்ந்த அந்த பெண்மணி, சிரித்துக் கொண்டே "எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது. உங்களுக்கு தெரிந்த யாராவது உள் இருந்தால், வீடியோவை பார்க்க சொல்லுங்கள். எந்த பிரேமிலும் நான் இருக்க மாட்டேன்" என்றார்! மொத்தத்தில் குழம்பி போய் நின்ற நண்பர், அவராகவே தெளிவானபின் கேள்வியை கேட்கட்டும் என்று சிரித்தபடி நின்ற அந்த பெண்மணி, அவரின் விசித்திர தோற்றத்தை வேடிக்கை பார்த்து செல்லும் மனிதர்கள், சற்று நேரம் அமைதியாக சென்றது. "சரி! அது போகட்டும்! எப்படி என்னை கண்டு பிடித்தீர்கள்? நான் இங்கு அல்லது, அந்த கடையில் காப்பி சாப்பிடுவேன் என்று எப்படி உங்களுக்கு தெரிந்தது?" என்றார் நண்பர். "அது மிக எளிது! எல்லா மனிதர்களும், தான் செல்லும் இடத்தில் எல்லாம் தன் கர்ம வாசனையை விட்டு செல்கிறார்கள். கெட்ட கர்மா வாசனையை வாயு பகவான் பூமியிலிருந்து அழித்து விடுவார். ஆதலால், நல்ல வாசனை மட்டுமே தங்கி இருக்கும். அதிலிருந்து, தற்போது அந்த கர்மவாசனை உடையவர் எங்கிருக்கிறார் என எளிதாக கண்டு பிடிக்க முடியும்! தற்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்" என்று கூறி நிறுத்தினார். "உங்கள் பெயர் என்ன? ஏன் உங்கள் எண்ணை என் செல்லில் சேமிக்க முடியவில்லை?" என்றார் நண்பர். "பெயர் என்பது ஒரு முக்கியமான விஷயமா? பிலாசபியில் உடலுக்கு பெயர் முக்கியமா? நான் அழைக்கும் எண்ணை சேமிக்க முடியாது. அது உங்களுக்கு தேவையும் இல்லை. யாரிடமும் பற்று கூடாது. எனக்கு தேவை என்றால் உங்களை நானே தொடர்பு கொள்கிறேன். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!" என்றாள் அந்த பெண்மணி. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

அவதூதர்கள் பகுதி ஒன்னு

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! ""இவர்" என்கிற தலைப்பில் சித்த மார்கத்தில் அடியேன் சந்தித்த சில பெரியவர்களை பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன்! அதில் இன்னும் இருவரை பற்றி தொகுக்க வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும், மிக மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள். இவ்வுலகில், இப்படியும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்களா! என்கிற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம். அப்படிப்பட்டவர்களை "அவதூதர்கள்" என்பார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் தெரியாத விஷயங்களே கிடையாது. இவர்கள் ரிஷிகள், மகான்கள், சித்தர்களுடன் கூட இருந்து லோக ஷேமத்திற்காக வேலை பார்ப்பார்கள். எவ் உருவமும், எந்த மொழியும், மனித வாழ்க்கைக்கு உட்பட்ட எந்த விஷயமும், இவர்களால் செய்ய முடியும். பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், இவர்களால் அந்த மொழியில் தெளிவாக பேசி பதிலுரைக்க முடியும். ஆனால், இவர்கள் மனிதர் முன் தோன்றி கலந்துரையாடல் செய்வது, ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம். மிகவும் ஆச்சரியப்படுகிற நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். பேசுகிறவரிடம், நிறைய தகவல்களை, அவருக்கு மட்டும் புரிகிற விதத்தில், பகிர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு அரிய முஹூர்த்தம், அடியேனது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் கிடைத்தது. நண்பரை, ஏற்கெனவே சித்தன் அருளில் "யோகா மாஸ்டர்" என அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர் ஒரு சிறந்த யோகா பயிற்றுவிப்பாளர். மிக அமைதியானவர். எங்கு சென்றாலும் தன் இருப்பை வெளிக்காட்டி கொள்ளமாட்டார். நடந்த விஷயங்களுக்கு வருவோம். அன்று மாலை 4 மணிக்கு "ஆன்லைன்" இல் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு 6 மணிக்கு தான் என்பதால், அபூர்வமாக ஒரு இரண்டு மணிநேர இடைவெளி கிடைத்தது நண்பருக்கு. ஏதேனும் ஒரு புத்தகம் வாசித்து "பிலாசபி" ஆராய்ச்சியை செய்யலாம் என்று நினைக்கும் பொழுது, அவரது செல் அழைத்தது. யாரது என்று எட்டிப் பார்த்த பொழுது எண் மட்டும், பெயர் இல்லை. அவருக்கு பரிச்சயம் இல்லாத தொடர்பானதால், எடுக்கலாமா வேண்டாமா என்ற கேள்வியில் சில வினாடிகள் செல்ல, யாரோ தலைக்குள் "எடு" என்று கூறுவது போல் தோன்ற செல்லை எடுத்து "ஹலோ" என்றார். மறு முனையிலிருந்து பேசியது ஒரு பெண்ணின் குரல். அவர் பேசியது ஹிந்தி போல் இருந்தாலும் அதில் வேறு மொழியின் கலப்பு இருந்தது. இவர் உடன் தனக்கு தெரிந்த மலையாள மொழியில், நீங்கள் யார், என்ன பேசுகிறீர்கள் என தெரியவில்லை, உங்களுக்கு மலையாளம் மொழி தெரியுமா? அதில் கூற வேண்டியதை, பேசுங்கள் என்றார். மறுமுனையிலிருந்து ஒரு நொடியில் "ஓ! இதுதான் மலையாள மொழியா! அதிலேயே பேசுகிறேன்!" எனக்கூறி சரளமாக திருவனந்தபுரம் மக்கள் பேசும் மலையாள மொழி வாடையில் பேச தொடங்கினார். இப்படி ஒரு நொடியில் மொழி மாற்றி, சரளமாக மலையாள மொழியில், அதுவும், இந்த ஊர் உச்சரிப்பில் பேசியதை கண்டதும், சற்று அதிர்ந்து போன இவர், இது ஏதேனும் ஏமாற்றுகிற பேர்வழிகளின் அழைப்பாக இருக்கும் என உணர்ந்து, "உங்களுக்கு என்ன வேண்டும்! எனக்கு படிப்பதற்காக அமர வேண்டும்! இப்பொழுது நேரமில்லை!" என்றார். இவருக்கு நேரம் காலம் இன்றி பல வேளைகளில் அழைப்பு வரும். யாரென்று பார்த்தால், அத்தனை பேரும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாக இருப்பர். தனக்கு மூச்சு பயிற்சி எடுக்க முடியுமா? இன்னென்ன பிரச்சினைகள் உள்ளது! எங்கு வந்தால் உங்களை சந்திக்கலாம்? என்ற கேள்விகளாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இவரின் தொடர்பு எண் கிடைக்கிறது என்பது, இன்று வரை ஒரு புரியாத புதிர்! பேசிய பெண்மணி "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? " என்றார். "யோகா பயிற்றுவிக்கிறேன்!" என்றார். "எனக்கு உங்களைத்தான் சந்திக்க வேண்டும்! இங்கு வர முடியுமா?" என்றார். "நீங்க யாருங்க? எங்கிருக்கீங்க? எங்கிருந்து வந்திருக்கீங்க, உங்களுக்கு என்ன தேவை?" என்றார். அடுத்த நிமிடம் அவர் கூறிய பதில் நண்பரை அதிரச் செய்தது. "நான் யார்? எங்கிருந்து வந்தேன், என்ன தேவை என்பதை நீங்கள் நேரடியாக வரும் பொழுது கூறுகிறேன். நான் இப்பொழுது நீங்கள் தினமும் காப்பி சாப்பிடும் "கும்பகோணம் காப்பி" கடை பக்கத்தில் நிற்கிறேன்!" என்றார். இந்த பதில் மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. மௌனமாக இருந்தார். அவர் தினமும் காப்பி சாப்பிடுகிற கடை என்னை போன்ற நண்பர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது! அதெப்படி இவருக்கு தெரிந்தது? யார் சொல்லியிருப்பார்கள்? என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, " நீங்க தினமும் இங்க தானே காப்பி சாப்பிடுவீங்க. அல்லது இங்கிருந்து நேரே செல்லும் ரோடில் இடது பக்கம் திரும்பி சென்றால் அங்கு வலது பக்கம் திரும்பும் ஒரு ரோடின் வளைவில் இருக்கும் "கணேஷ் காப்பி" கடையில் சில வேளை காப்பி அருந்துவீர்கள். இன்று எங்கு வர வசதி என்று கூறினால், அங்கு நிற்கிறேன்" என்றார். இவருடன் பேசுவது மேலும் மேலும் ஆச்சரியத்தை ஏற்றிக் கொண்டே சென்றதால், இவரை போய் பார்த்தால் என்ன என்ற உணர்வு வரத்தொடங்கியது. "சரி! வருகிறேன்! ஆனால் நான் வந்து சேர அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். அத்தனை தூரத்தில் என் வீடு உள்ளது. எனவே, நீங்கள் விரும்பினால் ஒன்று கூறுகிறேன். நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உள்ளே சென்று ஸ்வாமியை தரிசனம் செய்யலாம்! மேலும் அங்குதான் அகத்திய முனிவரின் சமாதியும் உள்ளது. அவரையும் நீங்கள் தரிசிக்கலாம்! நான் ஒரு 45 நிமிடத்தில் அங்கு வந்து உங்களை சந்திக்கிறேன்!" என்றார். "சரி! அப்படியே ஆகட்டும்!" என கூறி அந்த பெண்மணி செல் போனை துண்டித்தார். உடனேயே அந்த எண்ணை சேமித்து வைக்க தேடிய பொழுது அந்த எண் இவர் செல்லில் இருந்து அழிந்து போயிருந்தது. பதினைந்து நிமிடத்திற்கு மேலும் பேசிய அந்த தொடர்பை பற்றிய எந்தவித தடயமும் இவர் போனில் இல்லாமல் போனது. அதிர்ச்சியில் அமைதியான இவர் சற்று யோசனைக்குப் பின் "சரி போய்தான் பார்ப்போமே. என்ன! ஒரு பாதுகாப்புடன் போக வேண்டும், என்ன நடக்கும் என்று தெரியாது" என உணர்ந்து, தினமும் வகுப்பு எடுக்கும் முன் போட்டுக் கொள்ளும் சக்கர வளயத்தையும் போட்டுக் கொண்டு, தலை உச்சியில் இறைவனுக்கு சாற்றிய வாசனாதி திரவியத்தை மறைத்து பூசிக்கொண்டு, புறப்பட்டார், அவர் வாழ்க்கையில் முதல் முறையாக அதிரப்போகும் நிகழ்ச்சிகளை சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம் தொடரும்.......