Monday, December 4, 2023
இராமலிங்க அடிகளார்
ஓம் இராமலிங்க அடிகளார் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற்
கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
பாடல் விளக்கம்:-
ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம்.
நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.
அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும்.
வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.
நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார்.
இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார்.
மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்
கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.
நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும்.
சென்னையில் உறையும் கந்தவேளே !
குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment