Monday, December 4, 2023

சித்தன் அருள் - 1524 - அகத்தியப்பெருமானின் ஒரு உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! உங்கள் அனைவரிடம் அகத்தியப்பெருமான் உரைத்த ஒரு விஷயத்தை தெரிவிக்க விழைகிறேன். ஒரு குழந்தை, உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அடியேனுக்கு செய்தியை கூறி, திரு,ஜானகிராமனிடம் நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்க வேண்டினர். எங்கு பயணம் செய்தாலும், இப்படிப்பட்ட வேண்டுதல்களை அடியேன் தெரிவிக்கின்ற பொழுது அதற்கு, குருநாதரிடம் வாக்கு கேட்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு உடன்படிக்கை. பல அடியவர்களும், நோயினால் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது தொடர்பு கொண்டு வாக்கு கேட்கும் பொழுது, அகத்தியப்பெருமான் ஒரு விஷயத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டி இந்த தொகுப்பு. "காப்பாற்றுங்கள் என யார் ஓடிவந்தாலும் கருணையுடன் அருள்வது எங்கள் வழக்கம். ஆயினும், நோய் வாய்ப்பட்டவர், அவர் குடும்பத்தார் போன்றவர்களின் புண்ணிய பலத்தை பொறுத்துதான் எங்களால் காப்பாற்ற முடியும். ஒரு சில வேளைகளில் அந்த நேரத்தில் சில புண்ணியங்களை செய்தால் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், ஒரு சில பரிகார, புண்ணிய செயல்களை செய்யச் சொன்னால், மனதில் எந்த குறைகளையும் நினைக்காமல், மிகுந்த பக்தியுடன் அதை உடனே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இதை விடவும் கொடிய சூழ்நிலைகள் அனைவரின் வாழ்க்கையிலும் வரும். அதை நேர் கொள்வதற்காகத்தான், புண்ணியத்தை செய்யுங்கள், சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு உயிரை வதைக்காதீர்கள், அசைவம் அறவே தவிருங்கள் என உரைக்கிறோம். மேற்கொண்ட எதுவுமே செய்யாதவர்களுக்குத்தான், இறைவன் தண்டனையை இடிபோல் இறக்கி பலமான சோதனைகளை கொடுத்து, கதற விடுகிறான். எங்கள் அருள் வேண்டின், தினமும் உணவு உண்பதுபோல், தின வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புண்ணியத்தை சேர்த்திருக்க வேண்டும். இதை மனதில் இருத்தி எம் சேய்கள் அனைவரும் வாழ்ந்துவர ஆசிகள்!" அடியவர்களே, புண்ணியம் செய்வது நாம் சுவாசம் விடுவது போல் இருக்க வேண்டுமே அன்றி, தலைவலி மாத்திரை எடுத்துக் கொள்வது போல் இருக்கக்கூடாது! புரிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கேன் இந்த தலைவலி என யாரேனும் நினைக்கலாம். அடியேன் கூறிக்கொள்ள நினைப்பது ஒன்றுதான். முகம் பார்க்காமல் உதவினும், தோல்வியின் பக்கம் நிற்க அடியேன் ஒரு போதும் விரும்பாதவன். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments: